agathiyarvanamindia,18sithargal,naadi,jeeva samaathi,uzavaarapani,olaichuvadi,chennai jeeva samayhigal,

AGATHIYAR VANAM INDIA (AVI)

Wednesday, February 21, 2018

நினைத்ததை நிறைவேற்றித் தரும் ஸ்ரீ சக்கரை அம்மா - குரு பூஜை அழைப்பிதழ்


சித்தர்கள் என்றவுடனே நமக்கு எண்ணற்ற ஆண் சித்தர்கள்தான் நினைவுக்கு வருவார்கள். ஆனால், சர்வ வல்லமை படைத்த பெண் சித்தர்களும் உண்டு. அவர்களில் ஒருவர்தான் ஆனந்தாம்பாள் என்கிற 'சக்கரை அம்மாள்'.

சிவபெருமானையும், ஶ்ரீ சக்கரத்தையும் அனுதினமும் வழிபட்டு வந்தமையால் இவர் 'ஶ்ரீ சக்ர அம்மா' என்று அழைக்கப்பட்டார். நாளடைவில் இந்தப் பெயர் மருவி  'ஶ்ரீ சக்கரை அம்மா' வானது.





ஆனந்தாம்பாள் 1854 இல்  திருவண்ணாமலை மாவட்டத்தின் போளூர் வட்டத்தில் அடங்கும் தேவிகாபுரம் என்னும் சிற்றூரில் ஆதிசைவர் குடியில் பிறந்தவர் . தந்தை சேஷு குருக்கள் தேவிகாபுரம் பெரிய நாயகி அம்மன் கோவில் பூசகர்களுள் ஒருவர்.  சிறு அகவையிலேயே தாயை இழந்ததால் ஆனந்தாம்பாள் சிறிய தாயார் சுப்பம்மாவினால் வளர்க்கப்பட்டார். ஆனந்தாம்பாளுக்கு தன் ஊருக்கே நடுவாயுள்ள பெரிய நாயகி கோவிலின் உள்சுற்றில் மேற்கு மூலையின் கருவறையை உற்றுப் பார்த்தபடியே மணிக்கணக்கில் தன்னந்தனியாக அமருவது தான் பொழுதுபோக்கு.  

ஆனந்தாம்பாளின் வீடு கோவிலுக்கு வெகு அருகிலேயே அமைந்துவிட்டதால் அவள் நினைத்த போது உள்ளே சென்று அங்கு நேரம் கழிப்பதற்கு எளிதாக அமைந்துவிட்டது. ஊழ்கம் (தியானம்) பயிலாமலேயே கோவிலின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அமர்ந்து ஊழ்கும் பழக்கம் தானாகவே அவளுக்கு ஏற்பட்டிருந்தது. தன் அகவைக்கு ஒத்த பிள்ளைகள் விளையாடி மகிழ்ந்திருக்க தான் மட்டும் தந்தை சொல்லிக் கொடுத்த சிவ ஸ்தூதியை சொல்லியபடி ஊழ்கத்தில் அமைதியும் இன்பமும் காண்பாள்.





அக்காலத்தே இருந்த வழக்கப்படி ஆனந்தாம்பாளுக்கு 9 அகவை ஆகும் போது சென்னை எழும்பூருக்கு உட்பட்ட இன்றைய புதுப்பேட்டையாம் கோமளீச்சுவரன் பேட்டையில் இருந்த சட்டநாத மடத்தின் தலைவராக இருந்த தன் சிறியதாயாரின் உடன்பிறப்பாளராகிய திரு. சாம்பசிவ சிவாச்சாரியாருக்கு முதல் மனைவி இறந்ததன் காரணமாக இரண்டாவது மனைவியாக வாழ்க்கைப்பாட்டாள். சாம்பசிவத்திற்கோ அப்போது 24 அகவை. 

ஆனந்தாம்பாள் பூப்பெய்திய பிறகு தன் கணவனுடன் வாழ கோமளீச்சுவரன் பேட்டையில் உள்ள மடத்திற்கு அனுப்பப்பட்டாள். கோமளீச்சுவரன் கோவிலில் அவள் அடியாரர்களோடு அடியாராய் சிவனையும் சக்தியையும் வழிபட்டு நாள்முழுவதும் மடத்து வேலைகளையே செய்துவந்தாள். வேலை எல்லாம் முடிந்த பின் வீட்டு மொட்டை மாடியில் அமைந்த திண்ணையில் அமர்ந்து ஊழ்கம் (தியானம்) செய்வாள்.

கணவன் சாம்பசிவன் அவளுடன் இல்லறம் நடத்தாமல் வெளியிடக் கேளிக்கைகளிலேயே காலத்தைப் போக்கி தீராத நோய்க்கு ஆட்பட்டு 35 அகவையிலேயே மாண்டு போனார். அப்போது ஆனந்தாம்பாளுக்கு 20 அகவை தான். இதனால் அவள் இளம் அகவையிலேயே கைம்பெண் ஆனாள். அவர்களுக்கு பிள்ளை ஏதும் இல்லை. கணவன் இறந்த பதினொன்றாம் நாள் தலையை சிரைத்து காஷாய உடை அணிந்தாள். இந்த கைம்பெண் வாழ்வை அவள் நல்வாய்ப்பாகவே கருதினாள், ஊழ்கத்திற்கு இனி இடையூறு இல்லை என மகிழ்ந்தாள்.






நட்சத்திர குணாம்பாளுடன் தொடர்பு


சேஷு குருக்கள் கைம்பெண்ணான ஆனந்தாம்பாளை மீண்டும் தேவிகபுரத்திற்கே அழைத்துச் சென்று விட்டார். அங்கிருந்து அவள் தன் உடன்பிறந்தான் வாழும் போளூருக்கு சென்றுவிட்டாள். போளூரில் இருந்த நாள்கள் தாம் அவளை ஆன்மீகத்தில் முதிர்ந்த ஆன்மாவாக மலரச் செய்தன. அங்கு நட்சத்திரக் குன்றில் வாழ்ந்துவந்த நட்சத்திர குணாம்பாள் என்ற யோகினியுடன் ஆனந்தாம்பாளுக்கு அறிமுகம் ஏற்பட்டது. போளூர் விட்டோபா சுவாமிகளிடமும் அறிமுகம் ஏற்பட்டிருக்க வேண்டும். போளுர் திருவண்ணாமலைக்கு போகும் வழியில் இருந்ததால் அங்கு சென்றுவரும் ஓகியர் சித்தர்களைச் சந்தித்து அவரது ஆசிகளைப் பெறும் வாய்ப்பும் அவளுக்கு கிட்டியது.

ஒரு நாள் அடிமுடி சித்தர் போளூர் வழியாகத் திருவண்ணாமலைக்கு வருவதை அறிந்த ஆனந்தாம்பாள் அவருக்காக சமையல் செய்துவிட்டு பலமணி நேரம் வீட்டு வாயிலில் காத்து இருந்த வேளையில்அவருடைய ஒன்றுவிட்ட உடன்பிறப்பாளர் ஒருவர் கண்ட கருத்தைக்காக ஏன் இப்படி சாப்பிடாமல் பல மணி நேரம் காத்துக் கொண்டிருக்கிறாய் என்று கடுமையாகச் சொல்ல அதை அவள்பொருட்படுத்தாமல் இருந்தாள். நெடுநேரம் கழித்து வந்த அடிமுடி சித்தர் உனக்கு கம்பங்கூழ் செய்யத் தெரியுமா? என்றதற்கு தெரியாதுஎன்று சொல்ல எந்த வண்ணான் வீட்டிலாவது கம்பங் கூழ் சாப்பிட்டு விட்டு பிறகு உணவு உட்கொள்ள வருகிறேன்என்றார் சித்தர். சித்தர்கள் எல்லாருடைய மனஓட்டத்தையும் அறிந்தவர்கள். ஒன்றுவிட்ட உடன்பிறப்பாளர், கண்ட கழுதைக்காகஎன்று சொன்னதம் சித்தர் எந்த வண்ணான் வீட்டிலாவதுஎன்று சொன்ன பேச்சும் பொருந்துவதை உணரலாம். அடிமுடியார் திருவண்ணாமலையில் மலைசுற்றுப் பாதையை அமைத்தவர். கௌதம முனிவரின் மாணாக்கரான இவர் மலைச்சுற்றுப் பாதையை அடைத்துக் கொண்டு யாராலும் நகர்த்த  முடியாமல் இருந்த மிகப்பெரிய பாறாங்கல்லை தனது 28 அடி தலைமயிரைச் சுற்றிக் கட்டச் செய்து அதை மிக எளிதாக நகர்த்தியவர். இவருடைய சமாதி கௌதம முனிவரின் சமாதிக்கு எதிரே உள்ளது. அடிமுடி பரதேசி ஆனதந்தாம்பாளுக்கு முக்தி நிலையை மிக எளிதாக அடைய பல்வேறு அறிவுரைகளையும் வழிகாட்டுதல்களையும் அருளினார்கள். அவர் கூறியதவது எப்பொழுதும் இறைவனை நினைத்துக் கொண்டே நம் கடமைகளைச் செய்ய வேண்டும். இதுவே முக்தி அடைவதற்கு சிறந்த வழி.



ஆனந்தாம்பாளுக்கு குணாம்பாளிடம் தனி ஈடுபாடு ஏற்பட்டது, அதே போல் குணாம்பாளுக்கும் ஆனந்தாம்பாளிடம் தனி ஈடுபாடு ஏற்பட்டது. அவளைத் தன் மாணாக்கியாக ஏற்றுக்கொண்டதோடு அல்லாமல் தன் குழந்தையைப் போல் நடத்தினாள். தான் மீண்டும் சென்னைக்கு செல்ல வேண்டி வந்தபோது, இனி நான் எப்படி உங்களை நினைத்த போதெல்லாம் சந்திக்க முடியும்என்று ஏக்கத்துடன் ஆனந்தாம்பாள் கூறினாள். அதைக் கேட்ட குணாம்பாள், கவலை வேண்டாம், நீ விரும்பும் போது வந்து என்னைக் காணலாம், நீ யாரைக் காண விரும்புகிறாயோ அவர்களையும் காணலாம்என்று கூறித் தேற்றினாள். இதையடுத்து எண்பெருஞ் சித்துக்களில் ஒன்றான 'இலகிமா' என்னும் உடலை இலகுவாக்கி கொண்டு வானில் பறவை போல் பறக்கும் சிறப்பு ஆற்றலை ஆனந்தாம்பாளுக்கு நல்கினாள். அதோடு நட்சத்திர குணாம்பாள் தான் சமாதி அடையும் முன் ஆனந்தாம்பாளிடம் கொண்டிருந்த அளவிறந்த ஈடுபாடு காரணமாக அவளது பக்தியை மெச்சி தன் ஆன்மீக ஆற்றல் முழுவதையும் அவளுக்கு செலுத்திவிட்ட பின்பே தன் உடலைவிட்டு நீங்கினாள். பின்னொரு காலத்தில் ஆனந்தாம்பாள் தானே நட்சத்திர குணாம்பாள் என்று வெளிப்படுத்தினாள். நட்சத்திர குணாம்பாள் ஆனந்தாம்பாளூக்கு ஸ்ரீ சக்கர உபாசனையும் (வழிபாட்டை) உபதேசித்து இருந்தாள். இது பெண்வடிவில் இறைத்தன்மையை கொள்ளும் ஓர் ஆழ்ந்த ஆன்மீகப் பயிற்சி முறை. 



ஆனந்தாம்பாள் பறவை போல் வானில் பறந்து செல்வதைப் பலரும் பார்த்துள்ளனர். அவர்களுள் தமிழறிஞரும் தேசபக்தருமான தமிழ்த்தென்றல் திரு. வி. கலியாணசுந்தரனார் 'உள்ளொளி' என்ற தலைப்பில் தமது நூல் ஒன்றில் சென்னை கோமளீச்சுவரன் பேட்டையில் ஒரு மாது இருந்தார்கள். அவர் காலம் சென்ற மருத்துவர் நஞ்சுண்டராவின் குரு என்று உலகம் சொல்லும். அவ்வம்மையார் பறவையைப் போல் வானத்தில் பறப்பார். ஒருமுறை யான் வசித்த கல்லூரியின் (இராயப்பேட்டை வெஸ்லி கல்லூரி) மாடியில் பறந்து வந்து நின்றார். மானுடம் பறக்கின்றது என்றால் விந்தையல்லவா? அக்காலத்தில் சென்னையில் வசித்த விஞ்ஞானிகள் பலர் சூழ்ந்து கொண்டு அம்மையார் நிலையை ஆராய்ந்தனர். அப்போது சென்னை மியூசியத் தலைவராக இருந்த ஓர் ஐரோப்பியரால் (எட்கர் தர்சுடன்) பறவையார் நிலை பெரிதும் ஆராயப்பட்டது. அம்மையார் பறவை இனத்தில் சேர்ந்தவர் என்றும், அவரிடம பறவைக்குரிய கருவி காரண அமைப்புகள் சில உள்ளன என்றும், கூர்தல் அறப்படி (evolution) அத்தகைய பிறவி இயற்கையில் அமைதல் கூடும் என்று அவரால் விளக்கப்பட்டது. அவர் விளக்கம் மற்றவர்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. நான் தேசபக்தன் ஆசிரியராக இருந்தபோது நஞ்சுண்ட ராவுடன் நெருங்கிப் பழகுதல் நேர்ந்தது. அமரர் ராவ் அவர்கள், அம்மா சித்தர் இனத்தைச் சேர்ந்தவர் என்று சொன்னார். பறவை நாயகியர் நிலை மனோதத்துவத்திற்கு எட்டுவதா? எண்ணிப்பாருங்கள்.



மருத்துவர் நஞ்சுண்ட ராவுடன் அறிமுகம்


போளூரிலிருந்து கோமளீச்சுவரன் பேட்டைக்கு திரும்பியதும் ஆனந்தாம்பாள் தன் வீட்டு மொட்டை மாடித் திண்ணையில் ஊழ்கத்தை (தியானத்தை) முன்னினும் உறப்பாகத் தொடர்ந்தாள். தன் உலகக் கடமைகளை எல்லாம் மறந்தாள், நீரும் உண்டியும் கொள்வது கூட மறந்தாள். இதனால் உறவினர்கள் இவள் இளம் அகவையிலேயே கணவனை இழந்துவிட்டதால் பித்தையாகிப் போனாள் என்று எண்ணினர். மாடியில் உள்ள சிறிய அறையில் அவளுக்காக சிறிது நீரும் சோறும் வைத்துவிடுவார்கள் அவ்வளவே.

பத்தாண்டுகள் இடைவிடாத ஸ்ரீ சக்கர வழிபாட்டினால் நட்சத்திர குணாம்பாள் சொல்லி இருந்தபடி ஆனந்தம் எய்தும் அந்த நாள் வந்தது. திடீரென்று, அவள் கண்கள் கூசும்படி ஒள்ளிய ஒளி வட்டத்தின் கதிர்களால் சூழப்பட்டாள். இது அவளுக்கு தானே எரிந்து ஒளிர்வதைப் போன்ற உணர்வைத் தந்தது. அவள் பேரின்பப் பெருவெளியில் மிதக்கலானாள். எந்நேரமும் களிப்பில் மிதந்தாள். அந்த மகிழ்ச்சியில் வாய்விட்டு கட்டுக்கடங்காமல் சிரிக்கத் தொடங்கினாள். அதுமுதல் சிரிப்பு அவளது பண்பாகிப் போனது. இதைப் பார்க்கும் மடத்து மக்களும் உறவினரும் அவளை ஒரு பித்தை என்று கருதினர். இதன் பின் பல சித்திகளை ஆனந்தாம்பாள் அடைந்தாள்.

போளூரில் இருந்து கோமளீச்சுவரன் பேட்டைக்கு திரும்பிவரும் போது ஆனந்தாம்பாளின் உடன்பிறப்பான அருணாசலமும் உடன்வந்தார். மடத்தின் தலைமைப் பொறுப்பிற்கு தக்க வாரிசு இல்லாமையால் அவரே மடத்திற்கு தலைவராகி ஆண்டுகள் உருண்டோடின. அருணாசலத்திற்கு உடல்நலம் குன்றியதால் மருத்துவர் திரு M.C. நஞ்சுண்டராவ் அவருக்கு மருத்துவம் பார்க்க மடத்திற்கு வந்து போய்க் கொண்டிருந்தார். ஒருமுறை அவர் மருத்துவம் பார்க்க வந்திருந்த போது மாடியில் இருந்து உரத்த சிரிப்பொலி தொடர்ந்து வருவதைக் கேட்டு அது பற்றி உசாவினார். அதற்கு, மாடியில் பித்துபிடித்த பெண் ஒருத்தி  இருப்பதாகவும் அவளே வேளை கெட்ட வேளையில் பொருளற்ற வகையில் கடுஒலியுடன் சிரிப்பதாகவும் வீட்டார் தெரிவித்தார்கள்.

மருத்துவர் நஞ்சுண்டராவ் ஒரு தேசபக்தர் என்பதோடு ஆன்மீக நாட்டமுள்ளவராவும், குமுக நலத்தில் அக்கறை கொண்டு ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக மருத்துவம் செய்து நற்பெயர் பெற்றவராகவும் விளங்கியவர். அவர் ஆனந்தாம்பாள் மேல் மிக்க பரிவு கொண்டார். அங்கு வரும்பொழுது எல்லாம் ஆனந்தாம்பாளின் நடவடிக்கைகளை உற்றுநோக்கினார். 

ஒருபோது ஆனந்தாம்பாள் கோமளீச்சுவரன் கோவில் வாயிலில் தரையில் அமர்ந்துகொண்டு வருவோரை எல்லாம் பார்த்து சிரித்து கொண்டிருந்தார். திரு. ராவ அவரை அணுகி மெல்லிய குரலில் ஏன்? இப்படி சிரித்துக் கொண்டே இருக்கிறீர்கள்? என்று கேட்டார். சிரிப்பை உடனே நிறுத்திய ஆனந்தாம்பாள், 'மகனே! ஆன்மாவிற்கு எந்நேரமும் ஆனந்தமாய் இருப்பதுவே அதன் இயல்பு. இன்பமும் துன்பமும் பரு உடலையும் நுண் உடலையும் பாதிக்குமேயன்றி ஆன்மாவைப் பாதிப்பதில்லை. நீ உடம்பு அல்ல, நீ உடலுக்குள் இருக்கின்றாய். இதுவே உண்மை. உடலுக்கு எது நடந்தாலும் அது தற்காலிகமானதே. அதுவே ஆன்மா என்று உன்னை உன் உடலோடு தொடர்புபடுத்திக் கொள்ளாதே. ஆன்மா எப்பொழுதும் மகிழ்ச்சியாகவே இருக்கும். இதை உணராமல் இன்ப துன்பத்தில் உழன்று சலிப்புறும் மனிதர்களைப் பார்த்துத் தான் சிரிக்கின்றேன்' என்றார். உடனே மருத்துவர் திரு. நஞ்சுண்ட ராவ் இப்பெண்மணி ஆன்மீகத்தில் உயர்ந்தவர் என்பதை உணர்ந்து கொண்டார். அவர் ஸ்ரீ சக்கர உபாசனை பெற்று பக்குவம் அடைந்தவர் என்பதையும் தெரிந்து கொண்டார். குறுகிய காலத்தில் அவரது பின்பற்றாளரானார். ஆனந்தாம்பாள் தம்மை சக்கரம்மா என்றே குறிப்பிடுவார். மருத்துவர் ராவும் அவரை சக்கரத்தம்மா என்றே குறிப்பிட்டு அவர் பெருமையை எங்கும் பேசலானார். இதுவே நாளாவட்டத்தில் மக்கள் வழக்கில் சக்கரை அம்மாஎன்றானது.       

தன் கல்வியாலும் பெருமக்கள் நட்பாலும் உயர்ந்தவராய் இருந்தபோதும் திரு. நஞ்சுண்ட ராவ் எழுத்தறிவில்லாத எளிய கைம்பெண்ணான சக்கரை அம்மாவை தன் குருவென்று வெளிப்படையாக கூறியமையால் இன்னும் பலர் சக்கரை அம்மாவை தமது குருவாக ஏற்றுப் போற்றினர்.

சுவாமி விவேகானந்தர், சேசாத்திரி சுவாமிகள், பாம்பன் சுவாமிகள், அடிமுடிப் பரதேசி, விட்டோபா ஆகியோரை சக்கரை அம்மா கண்டு வணங்கியுள்ளார்.

திரு. நஞ்சுண்ட ராவ் சக்கரை அம்மாவை காசி உள்ளிட்ட பல திருத்தலங்களுக்கு தம்மோடு அழைத்துச் சென்றுள்ளார். திருவண்ணாமலைக்கு அப்படி அழைத்துக் கொண்டு போன போது கந்தாசிரமத்தில் சக்கரை அம்மா ரமணரை சந்தித்து வணங்கினார். சக்கரை அம்மாவை பற்றி பின்பு உயர்வாக தமது பின்பற்றாளர்களிடையே ரமணர் பேசியதை திரு. ஏ. தேவராச முதிலியார் என்ற ரமண பக்தர் அனுதினமும் ரமணருடன்என்ற தமது நூலில் சில சித்திகளைப் பெற்ற சக்கரை அம்மா அவர்கள் மருத்துவர் நஞ்சுண்டராவுடன் வந்து ரமணரை விருபாட்சிக் குகையில் சந்தித்ததாக எழுதியுள்ளார். 

சக்கரை அம்மா 1901 இல் திருவான்மீயூர் மருந்தீசுவரர் கோவிலில் ஈசனை வணங்கிவிட்டு திரிபுரசுந்தரி சன்னதிக்கு வந்த போது பக்தர்களுக்கு கை காண்பித்து என்னுடைய இந்த குழந்தைகளை உன்னிடம் ஒப்படைக்கிறேன் அவர்களுக்கு நீ முக்தி கொடுக்க வேண்டும் என்று வேண்டினார். வழியில் வந்துகொண்டிருந்த போது அப்போது அங்கிருந்த குச்சிலை (சவுக்கு) மரத்தோப்பைக் காட்டி அதை விலைக்கு வாங்குமாறு மருத்துவர் நஞ்சுண்டராவைப் பணித்தார். அதற்கு பின், தான் தன் உடலைகவிட்டுக் கூடிய விரைவில் நீக்கப்போவதாகவும் அந்த உடலை தாம் சுட்டிய அந்த தோப்பில் அடக்கம் செய்து சமாதி எழுப்புமாறு கேட்டுக் கொண்டார். தாம் அங்கிருந்தே தமது பக்தர்களுக்கு அருள்புரியப் போவதாகவும் தம்சமாதி ஒரு நூற்றாண்டு கழித்தே மக்கள் கவனத்தை ஈர்க்கும்மென்றும் அப்போது மக்கள் அதன் பெருமையை உணர்ந்து நாடி வருவார்கள் என்றும் சொன்னார்.

பிறகு பத்து நாள்களில் 1901 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 அன்று மாலை 3.30 மணிக்கு தமது 47 ஆம் அகவையில் கோமளீச்சுவரன் பேட்டை மடத்தில் சக்கரை அம்மா உடலை விட்டு நீங்கினார். அவரது உடல் பின்பற்றாளர்களால் திருவான்மியூருக்கு கொண்டு வரப்பட்டு அவர் சுட்டிக் காட்டியபடியே நஞ்சுண்டராவால் விலைக்கு வாங்கப்பட்ட அதே தோப்பில் நல்லடக்கம்  செய்யப்பட்டு சமாதி எழுப்பப்பட்டது. அதன் மேல் கோவில் கட்டப்பட்டது. அவர் திருவாய்மொழிக்கு ஏற்ப நூறாண்டுகள் கழித்து 2001 இல் மீண்டும் கோவில் புதுப்பிக்கப்பட்டு 2002 இல் குடமுழுக்கு நடைபெற்றது முதல் திரளான மக்களை ஈர்க்கத் தொடங்கி உள்ளது.  

சக்கரை அம்மாவின் ஆன்மிகப் பயணத்தில் முதல் முதலில் அவர்கள் உணர்ந்தது நான் பிரம்மம், பின்பு "எல்லாம் பிரம்மம், ஈற்றாக  அவர்கள் பிரம்மானந்த நிலையை அடைந்தார். அந்நிலையை அடைந்ததும் அம்மாவின் பின்புறத் தலையில் ஒளிவட்டம் தோன்றியது.  இவற்றை எல்லாம் அவருடைய அருமை பெருமைகளை முதன்முதலாக அடையாளங் கண்ட மரு. நஞ்சுண்டராவ் தமது நாட்குறிப்பில் எழுதி உள்ளார்.

மரு. நஞ்சுண்டராவ் விவேகானந்தரின் பின்பற்றாளர். பாரதியின் பேரன்பர். பாரதியார் ஆசிரியராக இருந்த 'பாலபாரதம்' செய்தி ஏட்டின் நிறுவனர். ராசாசி, அன்னிபெசன்டு, வ.வேசு., சி.பி. இராமசாமி ஐயர் ஆகியோரின் நண்பர். அவர் இறந்த பின் சக்கரை அம்மா சமாதிக்கு அருகே சமாதி வைக்கப்பட்டார்.

மரு. ராவ் சென்னை இராமகிருஷ்ணா மடத்தில் இராமகிருஷ்ணரின் 76 ஆம் பிறந்த நாளின் போது பிரபஞ்ச உணர்வு அல்லது முக்தி பற்றிய வேதாந்தக் கருத்து என்ற தலைப்பில் ஒரு சொற்பொழிவு ஆற்றினார். அது பின்பு 1909 ஆம் ஆண்டு ஜி.ஏ. நடேசன் கம்பெனியால் நூலாய் வெளியிடப்பட்டது. அதில் தம் குரு சக்கரை அம்மா பற்றிய சேதிகள் பலவற்றை அவர் எழுதி உள்ளார்.

மரு. ராவ், முக்தி என்பது என்ன என்பதை எழுத்தறவில்லாத எளிய அந்தணப் பெண் ஒருவரைக் கண்ட பின்பு தான் நான் தெரிந்து கொண்டேன். அவர் தான் கோமளீச்சுவரன் மடத்து சக்கரை அம்மா. அவரது பெருமைக்கு ஒரே சான்று அவர் எப்போதும் இருந்த ஆனந்த நிலைதான். இப்படி ஒவ்வொரு அணுவிலும் எப்போதும் பரிபூரணானந்தத்தை வெளிப்படுத்திய வேறு யாரையும் நான் கண்டதில்லை என்கிறார். பத்தாண்டுகள் தன்னுள்ளே ஆன்மீகப் போர் புரிந்து தன் முப்பதாவது அகவையில் ஊழ்கத்தில் ஆழ்ந்து இருந்தபோது திடீரென்று ஒரு தெய்வீகப் பேரொளியைக் கண்டு ஒளி, பரஒளி, என் வாழ்வின் சாரமான பேரொளி என்று பரவசமானார் அன்றிலிருந்து இறுதிநாள் வரை சக்கரை அம்மாவுக்கு என்றும் பேரானந்த நிலைதான் என்கிறார்.

காஞ்சி காமகோடிப் பெரியவர் சந்திரசேகரேந்திர சரசுவதி சுவாமிகள் 1948 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் ஐந்து நாள்கள் சக்கரை அம்மா சமாதியில் உட்கார்ந்து ஊழ்கம் செய்துள்ளார்.





தன் பக்தர்களை எல்லாம்"சென்னை திருவான்மியூர் திரிபுரசுந்தரி உடனுறை மருந்தீஸ்வரர் ஆலயத்துக்கு அழைத்துப் போய் ஈசனிடம், “என்னோட இந்த குழந்தைகளுக்கு ஒரு குறையும் வராமல் பார்த்துக்க. உன்னிடம் ஒப்படைக்கிறேன். நீதான் முக்தி கொடுக்கணும் சரியா?” என்று உரக்கச் சொன்னாராம். அப்படி சொன்ன பத்தாவது நாளில் 28-2-1901 பிற்பகல் 3.30 மணிக்கு சக்கரை அம்மா ஈசனுடன் கலந்தார்..சமாதி ஆவதற்கு முன் தன் முதன்மை சிஷ்யன் மகாகவி பாரதியாரின் நண்பர் டாக்டர் நஞ்சுண்ட ராவ் என்பவரை அழைத்து தான் சமாதி ஆகி சரியாக 100 வருடங்கள் ஆனதும் என் சமாதி துலங்கும் என்றாராம்..அதன்படியே தற்போது மிகுந்த அதிர்வுகளுடன்,வேண்டியதை கொடுக்கும் திருத்தலமாக சக்கரை அம்மாவின் சமாதி திருக்கோயில் திகழ்கிறது.இன்றும் இந்த ஜீவ சமாதியில்இங்குமங்கும் சக்கரை அம்மா நடந்தபடி இருக்கும் காலடி ஓசையை கேட்க முடியும் என்கிறார்கள் அடியவர்கள்..இங்கு மாதாந்திர திருவாதிரை,பௌர்ணமி நாட்கள் சிறப்பு...இதன் அருகிலேயே முருக அடியவர் மகான் பாம்பன் சுவாமிகள் சமாதி திருக்கோயிலும் உள்ளது குறிப்பிடத்தக்கது..



சக்கரை அம்மா சமாதி சென்னை திருவான்மியூரில் கலாட்சேத்திரா சாலை இலக்கம் 75 இல் காமராசர் சாலை கூடும் இடத்தில் உள்ளது. காலை 6 - 10 மணி வரையும் மாலை 4 - 8 மணி வரையும் திறந்திருக்கும். 

இத்தகு சிறப்பு மிக்க ஸ்ரீ சக்கரை அம்மா அவர்களின் குறு பூஜை வரும் 24/2/2018 மாலை தொடங்கி 25/2/2018 ம் தேதி காலை முதல் சிறப்போடு நடைபெற இருக்கின்றது. சன்மார்க்க அன்பர்கள் கலந்து கொண்டு அம்மாவின் ஆசி பெற அன்போடு வேண்டுகின்றோம்.







இன்றைய குரு  நாளில் ஸ்ரீ சக்கரை அம்மா அவர்களைப் பற்றி படிப்பதற்கும், கேட்பதற்கும் நாம் புண்ணியம் செய்திருக்க வேண்டும். 

மேலும் விபரங்களுக்கு : http://www.srisakkaraiamma.com/index.html

- மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம் 

1 comment:

Trending