agathiyarvanamindia,18sithargal,naadi,jeeva samaathi,uzavaarapani,olaichuvadi,chennai jeeva samayhigal,

AGATHIYAR VANAM INDIA (AVI)

Tuesday, February 20, 2018

கொங்கண சித்தர்4



கொங்கு நாட்டில் இவர் பிறந்தமையால் இவரைக் கொங்கணவர் என்றே அழைத்தனர். இவர் கோவைக்கு அருகேயுள்ள பகுதியில் வசித்தார் எனச் சிலரும், கோவை மாவட்டம் தாராபுரத்துக்கு அடுத்துருக்கும் ஒதிய மலையில் வாழ்ந்தவர் என்று சிலரும் கூறுவர்.
கொங்கணவரின் பெற்றோர் இரும்பை உருக்கிக் கலங்கள் (பாத்திரங்கள்) செய்து கோயில் வாசலில் வைத்து விற்றுத் தம் பிழைப்பை நடத்தி வந்தார்கள். ஏழ்மையான நிலையில் வாழ்ந்தாலும் யோகியர், சாதுக்கள் போன்றோரைக் கண்டால் அவர்களுக்கு வேண்டியவற்றைக் கொடுத்தும், உபசாரங்கள் பலவற்றைச் செய்தும் ஏவல் கேட்டும் பண்போடு வாழ்ந்து வந்தனர். இதுபற்றி அகத்தியர் பெருமான் தம் பெருநூல் காவியத்தில்.
ஆச்சப்பா கொங்கணவர் இருந்தவண்ணம்
அப்பனே அவர்பாடு முறைபாடெல்லாம்
மூச்சடங்கித் தவநிலைக்குச்செல்லா முன்னம்
மூதுலகில் இவர் தந்தை தாயின் வள்ளல்
பேச்சரிய முழுமக்கள் இருவர்தானும்
பேருலகில் இரும்புருக்கிக் கலங்கள் செய்து
மன்னவனே விற்றுண்ட புனிதராமே.
என்றுரைத்துள்ளார். மேலும் போகர் ஏழாயிரத்தில் போக முனிவர்,
திட்டமுடன் கொங்கணனார் பிறந்த நேர்மை
தீர்க்கமுடன் யானுரைப்பேன் சுகந்தமாறா
வட்டமுடன் சித்தரையாம் திங்களப்பா
வளமான உத்திராடம் முதற்கால் தன்னில்
அட்டதிசைதான் புகழப் பிறந்த பாலன்
அன்பான கொங்கணவர் என்னலாமே
என்னவே அவர் பிறந்த நேர்மையப்பா
எழிலான சங்கர குலத்து உதித்த
பன்னவே கானீனன் பெற்ற பாலன்.
என்று பாடியுள்ளார். அதாவது கொங்கணவர் எனும் இச்சித்தர் சித்தரை மாதத்து உத்திராட நட்சத்திரம் முதலாம் பாதத்தில் சங்கரகுலத்தில் பிறந்தார் என்று போகர் கூறியுள்ளார். ஆனாலும் அகத்தியர் பெருநூல் காவியம் மட்டுமே கொங்கணவரது பிறப்பு வளர்ப்பு பற்றி விரிவாக எடுத்துரைக்கின்றது.
கொங்கணவர் தம் பெற்றோர் போலவே இரும்புக் கலங்களைச் செய்து விற்றுப் பிழைத்து வந்தார். பணம் தேடிச் சேர்த்தார். திருமணமும் செய்து கொண்டார். மாடமாளிகைகள் கட்டி வாழ்ந்தார். தம்மை நாடி வரும் அதிதிகள், சாதுக்கள், ரிஷிகள் முதலானோர்க்கு பால், பழம் ஆகியவற்றுடன் அன்னமும் படைத்து உபசரித்தார். இதனால் மனம் மகிழ்ந்த ரிஷிகள்,
தெள்ளமிர்தம் ஆனதொரு பால் பழத்தால்
தேற்றமுடன் கொங்கணற்கு மனதுவந்து
உள்ளபடி மெய்ஞ்ஞானப் பாலை ஐயா
உந்தமற்கு உபதேசம் செய்ததாலே
கள்ளமிலாக் கொங்கணரும் மனதுவந்து
காசினியில் சமுசாரம் துறந்திட்டாரே.
என்றனர். அதாவது தம்மை நாடி வந்த ரிஷிகளுக்கு கொங்கணவர் பசும்பாலினை அருந்தக் கொடுத்தார். அவர்கள் கொங்கணருக்கு மெய்ஞ்ஞானம் என்னும் பாலை ஊட்டினர் அதனால் அவருள் இருந்த அஞ்ஞானம் அழிந்து, மெய்ஞ்ஞானம் கைவரப் பெற்றார். இல்லற வாழ்க்கையைத் துறந்து துறவியானார்…. என்றனர்.

No comments:

Post a Comment

Trending