agathiyarvanamindia,18sithargal,naadi,jeeva samaathi,uzavaarapani,olaichuvadi,chennai jeeva samayhigal,

AGATHIYAR VANAM INDIA (AVI)

Monday, February 12, 2018

சிவராத்திரி சிறப்பு பதிவு - 1008 சக்திகள தீப விழா

அகத்திய அடியார்களே.

இதோ..இன்னும் சரியாக 20 மணி நேரத்தில் நேரத்தில் நாம் சிவராத்திரி கொண்டாட இருக்கின்றோம். சிவ ராத்திரி அன்று நாம் சிவ உணர்வில் இருக்க வேண்டும். அதற்கு ஆலயம் சென்று வழிபடலாம். இயலாதவர்கள் இல்லத்தில் கூட விரதம் இருக்கலாம். நாளை ஒரு நாள் தொ(ல்)லைக்காட்சிக்கு  விடுப்பு அளித்து, எந்த ஒரு சூழ்நிலை ஏற்பட்டாலும் சரி. இன்று கடுஞ்சொல் பேசமாட்டேன் என்று மனதில் உறுதி பெறுங்கள். அதே போல், இன்று ஒரு நாள் பொய்யும் பேசமாட்டேன் என்று உறுதியாய் இருங்கள். வயிற்றை பட்டினி போடுங்கள். இங்கே ஆரோக்கியமும் கைவரப் பெரும். உடலை உணர உபவாசம் இருங்கள். உள்ளம் உணர சிவ சிந்தனை கொள்ளுங்கள். பிறகென்ன! அந்த சிவனோடு நித்தமும் சிவ ராத்திரி தான். இதோ இந்த பதிவில் நாளை அருள்மிகு பால்வண்ண நாதர் மற்றும் பாசுபதேஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும் 1008 சக்திகள தீப விழா பற்றிய அழைப்பிதழை இணைத்துள்ளோம். கண்டு இன்புறுங்கள். நேரில் அனுபவித்து சக்தி பெறுங்கள்.

அகத்தியர் ஆசியின் படியும்,ஸ்ரீ ஞான ஸ்கந்தர் நாடியில் முருகர் இட்ட கட்டளை படி உலக மக்களின் நன்மைக்காக மற்றும் பஞ்ச பூத சக்திகள் வலுப்பெறவும் ஸ்ரீ அகத்தியர் அதிஷ்ட தீபக் குழுவின் சார்பாக சிதம்பரம் அருள்மிகு பால்வண்ண நாதர் மற்றும் பாசுபதேஸ்வரர்  ஆலயத்தில்  வரும் 13.02.2018 அன்று1008 சக்திகள தீப விழா  நடை பெற உள்ளது.

உலக மக்களின் நன்மைக்காக  அட்ட வீரட்ட தலங்கள் மற்றும் பஞ்ச பூத தலங்களில் தீப வழிபாடு செய்ய வேண்டும். இதனால் இயற்கை சீற்றம் கணிசமாக  குறையும் என முருகப் பெருமான் ஜீவ அருள் நாடியில் உரைத்துள்ளார்கள்.

அதன்படி அட்ட வீரட்ட தலங்கள்,திருக்காளகஸ்தி,காஞ்சி  திருவண்ணாமலை மற்றும் திருவானைக்காவலில்  தீப வழிபாடு நடைபெற்றது. வருகிற 13.02.2018 அன்று சிதம்பரம் அருள்மிகு பால்வண்ண நாதர் மற்றும் பாசுபதேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற  உள்ளது. அனைவரும் வருக.

தீபத் திருவிழாவில் பங்கு பெரும் அனைவருக்கும் தீராத நோய் தீரும் ,தொழில் இல்லாதோருக்கு தொழில் கை கூடும்,வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்,திருமணம் தடை பட்டவர்களுக்கு திருமணம் நடைப் பெறும்,புத்திர பாக்கியம் வேண்டுவோருக்கு  புத்திரன் கிட்டும்,ஞானம் வேண்டுவோருக்கு ஞானம் அளிப்போம்,அனைத்து குறைகளும் நீங்கும்,என்ன கோரிக்கை வைக்கிறார்களோ அது நிறைவேற்றுவோம் என முருகக்கடவுள் உரைத்துள்ளார்.

ஆகவே அனைவரும் கலந்து கொள்க.


இனி கோயிலின் தல வரலாறு பாப்போம்.

பால்வண்ண நாதர் கோவில், திருக்கழிப்பாலை

இத்தலத்தில் சிவலிங்கப் பெருமான வெண்ணிறமுடையவராக விளங்கிறார். அதனாலேயே இறைவன் பால்வண்ண நாதேஸ்வரர் என்ற திருநாமத்துடன் இத்தலத்தில் அருட்காட்சி தருகிறார். வன்மீக முனிவர் இத்தலத்து இறைவனை வழிபட்டுள்ளார். கொள்ளிட நதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் தேவார காலத்து பழைய ஆலயம் அடித்துச் செல்லப்பட்டதால் அக்கோவிலில் இருந்த பால்வண்ணநாதேஸ்வரர் சிதம்பரத்திலிருந்து தென்கிழக்குத் திசையில் சுமார் 5 கி.மி. தொலைவிலுள்ள சிவபுரி என்றும் திருநெல்வாயல் என்றும் வழங்கும் மற்றொரு சிவஸ்தலத்தில் இருந்து தெற்கே தனி ஆலயத்தில் தனது மற்ற பரிவார தேவதைகளுடன் தற்போது எழுந்தருளியுள்ளார்.

3 நிலை ராஜகோபுரத்துடன் இவ்வாலயம் காட்சி அளிக்கிறது. வாயிலின் இருபுறங்களிலும் அதிகார நந்தியர் துணைவியருடன் தரிசனம் தருகின்றனர். கொடிமரம் ஏதுமில்லை. பிராகாரத்தில் சூரியன், விநாயகர், கிராதமூர்த்தி, மகாவிஷ்ணு, சுப்பிரமணியர், மகாலட்சுமி, நவக்கிரகம், காலபைரவர், சந்திரன் சந்நிதிகள் உள்ளன. உள்பிரகார நுழைவு வாசலின் இருபுறமும் அதிகார நந்தியர் தமது துணைவியருடன் உள்ளனர். உள் மண்டபத்துள் சென்றால் துவாரபாலகர்களைத் தரிசிக்கலாம். மண்டபத்தின் வலதுபுறம் தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதி உள்ளது. நடராசசபையில் சிவகாமி அம்மையின் திருமேனி தன் தோழியர் இருவர் சூழ ஒரே பீடத்தில் காட்சி தருகிறாள். துவார விநாயகரை, தண்டபாணியைத் தொழுது உட்சென்றால் மூலவர் தரிசனம். மூலவர் சந்நிதி நுழைவாயிலில் இருபுறமும் துவாரபாலகர்கள் காட்சி அளிக்கின்றனர். மூலவர் பெயருக்கேற்ப வெண்ணிறமாக சுயம்பு மூர்த்தியாக மிகச் சிறிய பாணத்துடன் காட்சியளிக்கிறார். மேற்புறம் சதுரமாக, வழித்தெடுத்தாற்போல் நடுவில் பள்ளத்துடன் அதிசயமான அமைப்புடன் இலிங்கத் திருமேனி காட்சி தருகின்றது. அபிஷேகத்தின்போது பால் மட்டும்தான் இப்பள்ளத்தில் தேங்கும். மற்ற அபிஷேகங்கள் அனைத்தும் ஆவுடையாருக்குத்தான் நடைபெறுகிறது. குதிரையின் கால் குளம்பு பட்டு பிளந்து போன வெண்ணிற லிங்கத்திற்கு தான் இன்றும் பூஜை நடக்கிறது. லிங்கத்திற்கு பின்னால் சிவனும் பார்வதியும் திருமணக்கோலத்தில் உள்ளனர்.

இவ்வாலயத்திலுள்ள காலபைரவர் இப்பகுதி மக்களால் மிகவும் பூஜிக்கப்பட்டு வருகிறார். பைரவர் கோவில் என்றே இப்பகுதி மக்கள் இவ்வாலயத்தை அழைக்கின்றனர்.

அருள்மிகு பால்வண்ண நாதர் திருக்கோவில்
திருக்கழிப்பாலை - சிவபுரி
சிவபுரி அஞ்சல்
வழி அண்ணாமலை நகர்
சிதம்பரம் வட்டம்
கடலூர் மாவட்டம்
PIN - 608002

பாசுபதேஸ்வரர் கோவில், திருவேட்களம்

தல வரலாறு: அர்ஜுனன் தவம் செய்து, பாசுபதம் பெற்ற முதன்மைத் தலமாகக் கருதப்படுவது திருவேட்களம். பாரதப்போரில் வெற்றி பெறுவதற்காக அர்ஜுனன் பாசுபதம் பெற விரும்பி சிவபெருமானை நோக்கி மூங்கில் காடாக இருந்த திருவேட்களத்தில் கடும் தவம் செய்கிறான். அர்ஜுனனின் தவத்தைக் கெடுக்க துரியோதனன் மூகாசுரனை பன்றி வடிவில் அனுப்பினான். சிவபெருமான் பார்வதியுடன் வேடன் உருவில் வந்து தனது அம்பால் பன்றியை கொன்றார். அதே பன்றியின் மீது அர்ஜுனனும் அம்பெய்தினான். அந்த பன்றியை யார் கொன்றார்கள் என்பது குறித்து சிவனுக்கும் அர்ஜுனனுக்கும் சொற்போரும், விற்போரும் நடந்தது. விற்போரில் அர்ஜுனின் வில் முறிந்தது. இதனால் கோபமடைந்த அவன் முறிந்த வில்லால் வேடனை அடித்தான். இந்த அடி மூவுலகத்தில் உள்ள அனைத்து உயிர்களின் மீதும் விழுந்தது. இதனால் அன்னை பார்வதி கோபமடைந்தாள். சிவன் பார்வதியை சமாதானப்படுத்தி தனது திருவடியால் அர்ஜுனனை தூக்கி எறிகிறார். அவன் சிவனின் பாத தீட்சை பெற்று, அன்னையின் கருணையால் இத்தல தீர்த்தத்தில் விழுகிறான். சிவன், உமாதேவியுடன் காட்சிகொடுத்து, அர்ஜுனனுக்கு பாசுபதம் கொடுத்து அருளினார். அர்ஜுன் வில்லால் அடித்த தழும்பு லிங்கத்தின் மீது இருப்பதை இன்றும் காணலாம். கிராதமூர்த்தியாக பாரவதிதேவியுடன் பாசுபதாஸ்திரம் கையில் ஏந்திய இறைவனின் உற்சவ விக்கிரகமும், அர்ஜுனன் உற்சவ விக்கிரகமும் இவ்வாலயத்தில் உள்ளன. வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தில் அர்ஜுனனுக்கு பாசுபதாஸ்திரம் அளித்த உற்சவம் நடைபெறுகிறது.
தற்போது மூன்று அடுக்கு ராஜகோபுரத்துடன் கோயில் கிழக்கு பார்த்து அமைந்துள்ளது. கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் பிரகாரத்தில் சித்திவிநாயகர், சோமஸ்கந்தர் சந்நிதிகள் உள்ளன. முன் மண்டபத்தில் தெற்கு நோக்கிய அம்பிகையின் சன்னதியில் நான்கு தூண்களிலும் அர்ஜுனன் தன் ஆயுதங்களை வைத்தல், ஒரு காலில் நின்று தவம் புரிதல், இறைவன் வேடன் வடிவம் எடுத்தல், சிவனும் அர்ஜுனனும் சண்டையிடுதல் போன்றவை சிறப்பாக செதுக்கப்பட்டுள்ளன. கோயிலின் சுற்றுப்பகுதியில் உள்ள நர்த்தன விநாயகர், அனுக்கிரக தட்சிணாமூர்த்தி, இந்திர மயில் மீதமர்ந்த முருகன் ஆகியன அனைவரையும் கவரும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அருகருகே சூரியனும் சந்திரனும் இத்தலத்தில் இருப்பது விசேஷம். இவர்களை சூரிய, சந்திர கிரகணங்களின் போது வழிபட்டால் கிரக தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். மூலவர் கருவறையில் கிழக்கு நோக்கு எழுந்தருளியுள்ளார். கோஷ்ட மூர்த்திகளாக உச்சி விநாயகர், நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவர், பிரம்மா ஆகியோர் உள்ளனர். சண்டேசுவரர் சந்நிதியுன் உள்ளது.

இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது 2 பாடல்கள் உள்ளன. இத்தலத்தில் முருகப்பெருமான் பன்னிரு திருக்கரங்களுடன் தனது தேவியர் இருவருடன் மயில் மீது கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். திருவாசியுடன் ஒரே கல்லில் அமைந்த திருவுருவம். வைகாசி விசாக விழா இத்தலத்தில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இத்தல தீர்த்தம் கிருபா தீர்த்தம் கோவிலின் எதரில் உள்ளது. தலமரம் மூங்கில்.
திருஞானசம்பந்தர் சிதம்பரத்தில் தங்கியிருப்பதற்கு மனமில்லாமல் திருவேட்களம் என்ற இத்தலத்திலிருந்து கொண்டு தான் சிதம்பரத்திற்கு எழுந்தருளி நடராஜப் பெருமானை தரிசித்து வந்தார்.

திருநாவுக்கரசர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் 5-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. தனது பதிகத்தின் முதல் பாடலில் இத்தல இறைவனைத் தொழுதால் நம் வினைகள் யாவும் தொலைந்து விடும், என்றும் இன்பம் தழைக்க இருந்து உய்யலாம் என்று குறிப்பிடுகிறார். மேலும் தனது பதிகத்தின் 6-வது பாடலில் "கவலைகளாற் கட்டப்பெற்று வீழ்ந்திடாது, விரைந்து உயிர்போவதற்கு முன்பே உயர்ந்த இறைவர் எழுந்தருளியுள்ள திருவேட்களம் இறைவனைத் கைதொழுவீர்களாக, அப்படி தொழுதால் பொருந்திய வல்வினைகள் அனைத்தும் கெடும்" என்றும் குறிப்பிடுகிறார்.


வாழ்வில் ஒளி பெற தீப வழிபாடு செய்வோம்.!

No comments:

Post a Comment

Trending