agathiyarvanamindia,18sithargal,naadi,jeeva samaathi,uzavaarapani,olaichuvadi,chennai jeeva samayhigal,

AGATHIYAR VANAM INDIA (AVI)

Wednesday, May 23, 2018

அகத்தியர் வழிபட்ட திருவாவடுதுறை கோமுக்தீசுவரர் கோயில்

திருவாவடுதுறை கோமுக்தீசுவரர் கோயில் திருமூவர் பாடல் பெற்ற தலங்களில் காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள 36ஆவது சிவத்தலமாகும்.

மாசிலாமணீசுவரர்,அப்பன் கோமுத்தீசுவரர்
தாயார்:
ஒப்பிலா முலையம்பிகை, அதுல்ய குஜாம்பிகை

தமிழ்நாட்டிலுள்ள நாகப்பட்டினம் மாவட்டத்தின் திருவாவடுதுறை எனும் ஊரில் புராண பெருமைகள் நிறைந்த கோமுக்தீசுவரர் (மாசிலாமணி ஈசுவரர்) கோயில் அமைந்துள்ளது . இக்கோயில், ஏறக்குறைய பத்து ஏக்கர் நிலப் பரப்பில் அமைந்துள்ளது. ஐந்து நிலை ராஜ கோபுரமும், மூன்று பிராகாரங்களும் கொண்டது. வடக்குப்புற நுழைவாயிலில், புதிதாக மூன்று நிலை ராஜகோபுரமும் எழுப்பப்பட்டுள்ளது மயிலாடுதுறையில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும், மயிலாடுதுறை - கும்பகோணம் இரயில் மார்க்கத்தில் உள்ள நரசிங்கன்பேட்டை இரயில் நிலையத்தில் இருந்து கிழக்கே 3 கிலோமீட்டர் தொலைவிலும் இத்தலம் இருக்கிறது. மயிலாடுதுறை - கும்பகோணம் சாலை வழியில் உள்ள திருவாலங்காடு என்ற பேருந்து நிறுத்தத்தில் இறங்கி 1 கிலோமீட்டர் நடந்து சென்றால் இத்தலத்தை அடையலாம்

சுயம்பு மூர்த்தியாக விளங்கிடும் இக்கோயிலின் மூலமூர்த்தி கோமுக்தீசுவரர் என அழைக்கப்படுகின்றார். அம்பாள் ஒப்பில்லாமுலைநாயகி ஆவார். இக்கோயிலின் மூலவர் சந்நிதியின் மேல் உள்ள விமானம் துவைதளம் என அழைக்கப்படுகின்றது. துணைவந்த கணபதி என்ற திருநாமத்துடன் இவ்வாலயத்தில் விநாயகர் அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றார்.
திருமூலர் திருமந்திரம் இயற்றிய திருத்தலமிது.

தலம், தீர்த்தம், மூர்த்தி எனும் மூன்றிலும் சிறந்து விளங்கும் திருவாவடுதுறை கோமுக்தீசுவரர் கோவில் மிகுந்த சிறப்பு உடையதாகும்.குழந்தை வரம் அருளும் திருவாவடுதுறை கோமுக்தீசுவரர் கோவில்

காவிரியாறு பாய்ந்தோடும் சோழ வள நாட்டில் ஏராளமான சிவாலயங்கள் அமைந்துள்ளன. அவற்றுள் தலம், தீர்த்தம், மூர்த்தி எனும் மூன்றிலும் சிறந்து விளங்கும் திருவாவடுதுறை கோமுக்தீசுவரர் கோவில் மிகுந்த சிறப்பு உடையதாகும். திருநாவுக்கரசர், திருஞான சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரால் பாடல் பெற்ற பெருமை இத் தலத்திற்கு உண்டு.
திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான இந்த ஆலயத்தில் உள்ள இறைவனை வழிபட்டால், குழந்தை வரமும், பொன்னும் பொருளும் வழங்கி அருள்வார் என்று தல புராணம் எடுத்துரைக்கிறது.
இந்தக் கோவிலில் வீற்றிருக்கும் இறைவனின் திருநாமம் கோமுக்தீஸ்வரர். இவர் மாசிலா மணீசர், கோகழி நாதர், அணைத்தெழுந்த நாயகர், புத்திர தியாகர் போன்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறார். இறைவி அதுலகுச நாயகி, ஒப்பிலா முலையம்மை, ஒப்பிலாள் என்ற திருநாமங்கள் கொண்டு திகழ்கிறாள்.

கோவிலின் முன்பு ‘முக்தி தீர்த்தம்’ என்ற தீர்த்தக் குளம் உள்ளது. தல விருட்சம் அரச மரமாகும். இந்த ஆலயத்தை நந்தித் தலம் என்றும் அழைப்பர். கோவிலில் உள்ளே பிரமாண்டமான நந்தி சிலை ஒன்று உள்ளது. பிற ஆலயங்களில் ஒரே கல்லினால் நந்தி சிலை செதுக்கப்பட்டு இருக்கும். ஆனால் இங்கு பல சதுர நீண்ட செவ்வகக் கற்களால் வியத்தகு முறையில் நந்தி சிலை அமைக்கப்பட்டுள்ளது. பிரதோஷ காலங்களில் இந்த நந்திக்குத்தான் விசேஷ அபிஷேகம் செய்யப்படுகிறது.

முசுகுந்த சக்கரவர்த்தி :
கயிலாயத்தில் இருந்த குரங்கு ஒன்று, மகாசிவராத்திரிஅன்று வில்வ இலைகளை பறித்து கீழே எறிந்து கொண்டிருந்தது. அப்படி எறிந்த வில்வ இலை அங்கிருந்த சிவலிங்கத்தின் மீது விழுந்தது. இதனால் இறைவன் பெரு மகிழ்ச்சியுடன் அந்த குரங்கிற்கு, மனித உருவத்தைக் கொடுத்து மூன்று உலகங் களையும் ஆளும் சக்கரவர்த்தியாக வரம் அளித்தார். அவரே முசுகுந்த சக்கரவர்த்தி ஆவார். அவர் இறைவன் திருவடி பணிந்து, ‘நான் சக்கரவர்த்தியானாலும் குரங்கின் முகமும், இறைவனை பற்றிய சிந்தனையும் எப்போதும் என்னுடன் இருக்க அருள வேண்டும்’ என வேண்டிக் கொண்டார். அவரது விருப்பத்தை இறைவனும் நிறைவேற்றி ஆசி வழங்கினார்.
வலாசுரன் என்ற அரக்கன் தேவர்களுக்கு மிக்க துன்பம் கொடுத்ததுடன், இந்திரனை போரில் வென்றான். இதனால் வானுலகை விட்டு இந்திரன் பூமிக்கு வந்தான். இதையறிந்த முசுகுந்தன் பெருஞ்சேனையுடன் சென்று வலாசுரனை அழித்து, கற்பக நாட்டை மீட்டு இந்திரனுக்கு அளித்தார். தனக்கு உதவி செய்த முசுகுந்தனை பாராட்டிய இந்திரன், ‘உனக்கு தேவையானதைக் கேள். உடனே தருகிறேன்’ என்றான்.

முசுகுந்தன், ‘மயன் உனக்கு அளித்த தியாகேசமூர்த்தியை எனக்கு தர வேண்டும்’ என கேட்டார். அதைக்கேட்டு திடுக்கிட்ட இந்திரன், ‘கொடுத்த வாக்குறுதியை மீறக் கூடாது’ என நினைத்தான். உடனே மயனை அழைத்து, மேலும் 6 விடங்கேசர் திருஉருவை உருவாக்கினான்.
இதை முசுகுந்தனிடம் இந்திரன் வழங்க, இறைவன் திருவருளால் உண்மையான திருவிடங்கேசரை அடையாளம் கண்டு அதை தரும்படி கேட்டார் முசுகுந்தன். இதையடுத்து உண்மையான தியாகேச மூர்த்தியையும் கொண்டு வந்து இந்திரன் கொடுத்தான். சப்த விடங்கேசுவரையும் பெற்றுக்கொண்ட முசுகுந்தன், அவற்றைத் தேர் மேல் வைத்து பூமிக்கு கொண்டு வந்தார். பின்னர் திருநாகைக்காரோணம், திருக்ககோளிலி, திருவாய்மூர், வேதாரண்யம், திருநள்ளாறு, திருகாரவாயில் ஆகிய ஆறு இடங்களில் கோவில் அமைத்து எழுந்தருளச் செய்தார்.
பின்னர் வீதி விடங்கதியாகேசரை திருவாரூரில் பொற்கோவில் உருவாக்கி இறைவியோடும், பீடத்தில் எழுந்தருள செய்து ஆகம முறைப்படி ஆறு கால பூஜையையும், விழாக்களையும் நடத்திக் கொண்டு அரசாண்டு வந்தார்.

இப்படி சிறப்பாக ஆட்சி செய்து வந்த முசுகுந்தனுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. இதனால் விடங்க தியாகேசர் சன்னிதிக்கு சென்று தன் மனக் குறையை தெரிவித்தார். புத்திர பாக்கியம் அருளி, தன்னை சிவபக்தர்கள் கூட்டத்தில் சேர்த்து ஆட்கொள்ள வேண்டும் என்று வேண்டினார்.
அன்று இரவு முசுகுந்தன் கனவிலே தோன்றிய இறைவன், ‘திருவாரூரில் உள்ளதைப் போலவே, திருவாவடு துறையிலும் நான் உள்ளேன். அங்கு சென்று பணி செய்து வா! அப்படி செய்யும் காலத்தில் புத்திரனை பெற்று மகிழ்வாய்’ என்று அருளினார்.

மறுநாள் முசுகுந்தன் சேனைகளுடன் கோமுக்தி வந்து, தீர்த்தத்தில் நீராடி மாசிலாமணி பெருமானின் சன்னிதிக்கு வந்தார். அப்போது இறைவன் திருவாரூரில் உள்ள வன்மிக லிங்கமாக முசுகுந்தனுக்கு காட்சி கொடுத்தார். இதனைக்கண்டு முசுகுந்தன் இறைவனைப் போற்றித் துதித்தார்.அப்போது ஒரு அசரீரி ஒலித்தது. ‘முசுகுந்தா! உனக்கு புத்திரப்பேறை அளித்தோம். உனக்கு ஞானத்தை பின்னர் தருவோம். அதுவரை இங்கேயிருந்து நம்மை பூஜித்து வருவாயாக’ என்றது ஈசனின் குரல்.

ஆனந்தம் கொண்ட முசுகுந்தன் அத்தலத்தில் தங்கியிருந்து, திருவாவடுதுறையை காவல்புரியும் சாஸ்தா, காளி முதலான கிராம தேவதைகளுக்கு 10 நாள் திருவிழாக்களை நடத்தினார். மாசிலாமணி பெருமானுக்கு 10 நாள் திரு விழாவை நடத்தினார். 5-ம் நாள் விழாவில் திருநடனம், 9-வது நாள் தேரோட்டம், 10-ம் நாள் தீர்த்தவாரி நடத்தப்பட்டது. ரதசப்தமி மகோற்சவத்தில் அரசர்கள், வேத விற்பன்னர்களுக்கு சன்மானம் வழங்கினார்.
இறைவனின் திருவருளால் முசுகுந்தனுக்கு எட்டு குழந்தைகள் பிறந்தன. மூத்த மகனுக்கு பட்டாபிஷேகம் செய்து ஆட்சியை மகனிடம் ஒப்படைத்தார். பின்னர் சிவனடியார்கள் கூட்டத்தோடு சேர்ந்து இறைவன் திருவடியில் கருத்தை செலுத்தி இறைவனடி சேர்ந்தார்.

ஆலய அமைப்பு :

கோவிலில் மூலவர் மாசிலாமணி, லிங்கத் திருமேனியுடன் எழுந்தருளியுள்ளார். சன்னிதியின் இருபுறமும் துவார பாலகர்கள் சிலை உள்ளன. அதன் கீழ் இரு விநாயகர் வீற்றிருக் கிறார்கள். மூலஸ்தானத்திற்கு எதிரில் நந்தியெம்பெருமான் அருள்புரிகிறார்.
ஒப்பிலாமுலையம்மை சன்னிதி, தெற்கு நோக்கி அமைந்துள்ளது. தாமரை ஜெபமாலை, அபய, வரத ஹஸ்தங்களுடன் நின்ற கோலத்துடன் அன்னை காட்சி தருகிறாள். அம்மன் சன்னிதிக்கு இருபுறமும் ஆடிப்பூர சன்னிதி, பள்ளியறை சன்னிதி உள்ளன. மகா மண்டபத்தின் இடது புற சுவரில் நர்த்தன விநாயகர் அமர்ந்துள்ளார். சண்டிகேஸ்வரர் தனி சன்னிதியில் இருந்து அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் இருந்து திருமந்திரம் பாடிய திருமூலருக்கு தனி சன்னிதி இருக்கிறது. இந்த ஆலயத்தில் தினமும் 6 கால பூஜைகள் நடைபெறுகின்றன.

சம்பந்தருக்கு பொற்கிழி :
ஒரு சமயம் திருஞான சம்பந்தரின் தந்தை வேள்வி ஒன்றை நடத்தினார். அந்த வேள்விக்கு தங்கம் தேவைப்பட்டது. தந்தைக்கு தேவைப்படும் தங்கத்தை பெற்று தர, திருஞானசம்பந்தர் பெருமுயற்சி மேற்கொண்டார். இதற்காக அவர் திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் கோவிலுக்கு வந்து, இறைவனை நினைத்து மனமுருக 11 பாடல்களைப் பாடியுள்ளார்.

‘இடரினும் தளரினும் எனதுரு நோய்
தொடரினும் உனது கழல் தொழு தெழுவேன்
கடல்தனில் அமுதோடு கலந்த நஞ்சை
மிடரினில் அடக்கிய வேதியனே
இதுவோ எமை ஆளுமாறீவ தொன்று யெமக்கில்லையேல்’
அதுவோ உனதின்னருள் ஆவடுதுறை அரனே’

‘ஆவடு துறை அரனே. துன்பம், தளர்ச்சி, வினைத் தொடர்ச்சி ஆகிய எந்த காலத்திலும் உன்னுடைய திருவடிகளைத் தொழுவேன். திருப்பாற்கடலில் அமுதோடு கலந்த நஞ்சை உண்டு, உலகை காத்த வேதியனே! வேள்விக்காக தந்தையார் கேட்கும் பொருளை தனயன் கொடுக்க முடியாத நிலை உண்டானால், அடியவரை இறைவன் ஆட்கொள்ளும் நிலை இதுவோ என்று உலகம் கூறும். அதுவோ உனது இன்னருள்’ என்பது இந்தப் பாடலின் பொருளாகும்.
இந்தப்பாடலை பாடிய உடன் சிவபெருமான், பூத கணங்கள் மூலம் ஆயிரம் பொற்காசுகள் நிரம்பிய பொற்கிழியை திருஞான சம்பந்தருக்கு வழங்கினார்.





தம்பதியரை ஒன்று சேர்க்கும் தலம் :

ஒரு முறை சிவன், பார்வதிதேவியை பசுவாக போகும் படி சாபமிட்டார். பசு வடிவம் கொண்ட உமாதேவி, திருவாவடுதுறை காட்டில் மேய்ந்து அங்கிருந்த சிவலிங்கம் மீது பாலை சொரிந்தார். இதையடுத்து உமாதேவியின் பசு வடிவ சாபத்தை நீக்கிய சிவபெருமான், அந்தத் தலத்தில் பார்வதிதேவியை அணைத்தபடி எழுந்தருளினார். இதனால் இந்தப் பகுதி ‘கோமுக்தி நகர்’ என்று பெயர் பெற்றது. சுவாமி அணைத்தெழுந்த நாயகர் என்று அழைக்கப்பட்டார்.
கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருக்கும் தம்பதியர், இந்த ஆலயத்திற்கு வந்து இறைவனை வழிபட்டால் அவர்கள் ஒற்றுமை பலப்படும் என்பது நம்பிக்கை. கோவிலின் முன்புள்ள முக்தி தீர்த்தத்தில், அமாவாசை, பிரதோஷம், அஷ்டமி, உத்திராயணம், தட்சிணாயணம், சோமவாரம், செவ்வாய்க்கிழமை, பிரமோற்சவ காலங்களில் நீராடினால், வேண்டிய வரங்களை பெறலாம் என தலபுராணம் கூறுகிறது.

சிவபக்தரான திருமாளிகைத் தேவர் மீது படையெடுத்து வந்த நரசிங்க மன்னனுடன் போரிட்டு அவரைத் தோற்கடிப்பதற்காக அம்பிகை திருவாவடுதுறை கோயில் மதில் மீது இருந்த நந்திகளனைத்தையும் ஒரே நந்தியாக்கி அனுப்பியதால் இன்றளவும் இத்திருக்கோயில் மதில் மீது நந்திகள் கிடையாது.

சிவபெருமானே சகல தோஷங்களும் நிவாரணமாக இருப்பதால் இத்திருக்கோயிலில் நவக்கிரகங்களுக்கு தனிச் சந்நதி கிடையாது.

திருஞானசம்பந்தர் தமது தந்தையின் வேள்விக்காக சிவபெருமானிடம் ஆயிரம் பொற்காசுகள் பெற்ற திருத்தலம்

முப்பத்து முக்கோடி தேவர்களும் படர் அரச மரமாக இருக்க அம்மரத்தின் கீழ் சிவபெருமான் திருநடனம் புரிந்த திருத்தலம்

தமிழகத்திலேயே உயரமான விஸ்வரூப நந்தி

தமிழகத்திலேயே உயரமான நந்தியெம்பெருமான் இத்திருத்தலத்திலேயே அமைந்துள்ளார். இவரது உயரம் 14 அடி 9 அங்குலம். (தஞ்சாவூரில் அமைந்துள்ள பெரிய கோயில் ஒரே கல் நந்தியின் உயரம் 12 அடி).

குழந்தை வரம் அருளும் கோயில் திருவாவடுதுறை கோமுக்தீசுவரர் கோவில்
கோவில் பற்றிய தகவல்கள் அறிய +91- 4364 - 232 055 இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில், திருவாவடுதுறை பஸ் நிலையத்தில் இருந்து தெற்கே 1 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது இந்த ஆலயம்.

சித்தர்கள் பூஜித்த இந்த திருக்கோயிலில் நாமும் போற்றி பணிந்து வளமும் நலமும் அடைவோம்.


No comments:

Post a Comment

Trending