agathiyarvanamindia,18sithargal,naadi,jeeva samaathi,uzavaarapani,olaichuvadi,chennai jeeva samayhigal,

AGATHIYAR VANAM INDIA (AVI)

Monday, February 26, 2018

பாண்டிச்சேரி ஸ்ரீ லோபாமுத்திரை அகஸ்த்தியப்பெருமான் ஆயில்ய பூஜை

பொதிகை மலை

அகத்தியர் அருள் புரிகின்ற மலை. ஆன்ம தரிசனம் காட்டுகின்ற மலை, வாழ்வில் பசுமையைப் போர்த்துகின்ற மலை, தாமிரபரணி உற்பத்தியாகும் மலை, சிவனாருக்கு திரு அண்ணாமலை போன்று, நம் அகத்தியருக்கு பொதிகை மலை, வாழ்வில் ஒரு முறையேனும் அருள் பெற துடிக்க வைக்கும் அற்புத மலை . இன்னும் நாம் பொதிகை செல்லவில்லை. செண்பகப் பொழில் வரை சென்றுள்ளோம். செண்பகப் பொழில் என்றால் யோசிக்கின்றீர்களா? தென்காசியின் மற்றுமோர் பெயர் தான் இது. எவ்வளவு அழகாக இருக்கின்றது? பொதிகை தரிசனம் பெற அகத்தியரிடம் வேண்டுகின்றோம்.

இந்த பதிவில் பொதிகை வேந்தனாம் அகத்திய பெருமானின் ஆயில்ய பூஜை நிகழ்வுகளை அறிய உள்ளோம். சென்ற மாதம் ஆயில்யம் அக்டோபர் 14 முதல் 15 தேதி காலை 9 மணி வரை இருந்தது.
பாண்டிச்சேரியில் உள்ள ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்லத்தில்  ஆயில்ய பூஜை நடைபெறுவது பற்றி அறிந்தோம். அன்றைய தினம் யாம் பெற்ற அருளை, இங்கே தர முயற்சிக்கின்றோம். பிழை இருப்பின் பொறுத்தருள்க!


நெஞ்சார நினைப்பவர்க்கு நிழலாவானை
நீங்காதார் குலம் தழைக்க நிதி யாவனை 
செஞ்சாலி வயல் பொழி சூழ் தில்லை மூதூர்
சிலம்பொலி போல் பாடுகின்ற  சித்தன் தன்னை
வெஞ்சாபமும்  இல்லை ஓர் வினையும் இல்லை
வேலுண்டு துணை வருங்கால் வெற்றி யுண்டாம்
அஞ்சாதீர் என்று யுக யுகத்தும் தோன்றும்
அகத்தியனை அருட்குருவை
அகத்துள் வைப்போம்

என்னும் அகத்தியர் துதியுடன் அகத்தியர் ஆயில்ய ஆராதனைக்குச்  செல்வோம். இந்த பதிவை தொடர் பதிவாக அளிக்க நினைத்தோம். ஆனால் காலம் கருதி ஒரே பதிவில் தர முயற்சிக்கின்றோம். பதிவின் நீளம் அதிகமாக இருப்பின் பொறுத்தருள்க.மேலும் இந்த பதிவில் மிக அதிகமாக நிகழ்வின் தருணங்களை இணைத்துள்ளோம். மிக மிக பொறுமையாக பார்க்கவும்.

அக்டோபர் 14 ம் தேதி மாலை சுமார் 4 மணி அளவில் அகத்தியர் ஞானம் இல்லம் அடைந்தோம்.
சுவாமிநாதன் ஐயா அவர்களோடு பரஸ்பரம் அறிமுகம் செய்து கொண்டு பேசத்  தொடங்கினோம். நேரம் சென்றதே தெரியவில்லை.பின்னர் சுமார் 5:45 மணி அளவில் அருகில் உள்ள புதுச்சேரி சித்தர் கோயில்களை தரிசித்தோம். அந்த அனுபவத்தை தனிப் பதிவாக அளிக்க குருவிடம் வேண்டுகின்றோம். தரிசனம் முடித்து சுமார் 6 மணி அளவில் மீண்டும் அகத்தியர் ஞானம் இல்லம் வந்து சேர்ந்தோம். ஆயில்யம் பூஜை மாடியில் என்றார்கள். மாடிக்குச் சென்றோம். இதோ ! ஆயில்ய பூஜை ஆரம்பம்.








இங்கு நாம் அமர்ந்த போதே, நம்முள் ஒரு உள்ளார்ந்த நிலை உண்டானது. நாம் அமைதியாக அமர்ந்து அபிஷேகத்தை ரசித்துக் கொண்டிருந்தோம். உதவியாக இரு சிறார்கள் இருந்தார்கள். நமக்கு இது சற்று ஆச்சர்யம் தந்தது. கடவுளை அவர்கள் ரூபத்தில் கண்டோம். வேறெங்கும் இப்படி யாம் கண்டதில்லை.


ஒவ்வொரு அபிஷேகமாக செல்லச்  செல்ல கயிலையில் இருப்பதை போன்ற உணர்வு ஏற்பட்டது. சிவ சதாசிவமே சத்தியம். சத்தியமே சிவசதாசிவம் என்று அங்கே இருந்தது. எத்துணை உணர்வுப்பூர்வமான வார்த்தைகள். அகத்தியரில் சிவத்தைக் கண்டோம். சிவனில் அகத்தியரை கண்டோம் என்ற அருள் நிலை. இதை உணரத்தான் முடியுமே தவிர, உணர்த்த முடியாது.


ஒவ்வொரு அபிஷேகம் நடக்கும் போதும், நேர்த்தியாக இருந்தது, பொறுமையாகவும், கடமையாகவும் செய்வதைப் பார்த்து பிரமித்துப் போய்விட்டோம் என்பதே உண்மை. மேலே உள்ள காட்சிப் படங்களைப் பாருங்கள். நாம் சொல்ல வரும் செய்தி, உங்களுக்குப் புரியும். இதே போன்று தான் ஒவ்வொரு அபிஷேகமும், இதை இப்படித்தான் செய்வது என்று இங்கே திட்டமிட்டு செய்வதில்லை. அப்படி செய்தால் அது வேலை என்ற கணக்காகிவிடும். இங்கே எந்த திட்டமிடலும் இல்லை, அகத்தியரின் வழி காட்டலில் நடைபெறுகின்றது என்பது நூற்றுக்கு நூறு உண்மை.








அபிஷேகம் முடித்து,தூப தீப ஆராதனை காட்டும் போது, இதற்கு தானே ஆசைப்படுகின்றோம் என்று மனதில் தோன்றியது. அன்பின் ஆழம் அங்கே உணர்த்தப்பட்டது, கருணையின் உண்மை காட்டப்பட்டது. மனது பரத்தின் வசமானது. அகத்தியரின் தரிசனத்தில் நம் அகத்துள் உறைகின்ற ஈசனை தரிசிக்க வாய்ப்பு கிட்டியது.


அகத்தியரின் தரிசனம் பெற, பெற, வேலோடு கையில் உள்ள அருள் நிலையில், ஆரம்பத்தில் நாம் ஆரம்பித்த பாடலில் உள்ள வேலுண்டு துணை வருங்கால் வெற்றி யுண்டாம்  என்று மனம் துள்ளிக் குதித்தது. இது தான் நாம் பெற வென்றிய அருள் நிலையாம்.







மனதுள் பொதிகை வேந்தன் தரிசனம். மனதுள் அகத்தியர் நாமம் சொல்லிக்கொண்டே இருந்தோம். ஒவ்வொரு அபிஷேகமும் ஊனினை உருக்கியது, உள்ளொளி பெருக்கியது, உளப்பிலா ஆனந்தம் தந்து கொண்டே இருந்தது. இன்பத்துள் இன்பமாய் பேரின்ப ஊற்றை தந்து கொண்டிருந்தது.




அன்பர்களே..அபிஷேகம் எப்படி உள்ளது? கண்ணுக்கு மட்டுமா? இனிமை. நம் உள்ளத்திற்கே இனிமை தானே? கண்ணில் மற்றும் ஒற்றிக் கொள்ளாதீர்கள். கருத்திலும் ஒற்றிக் கொள்ளுங்கள்.
கருத்தினில் வைக்க, வைக்கத்  தான்  அகத்தியம் மலரும்.








ஒற்றை மலரின் அழகில், நம் அப்பனும் அழகு, நம் அன்னையும் அழகு. இரு கண்கள் தான் போதவில்லை நமக்கு! அடுத்த அபிஷேகம் பார்க்க தயாரா?





மறுபிறப் போட்டியிச் சிறுவனை யாளுங்
குறுமுனி யெம்மான் நறுமலர்த் தாளே

என்று பூரண சரணாகதி நோக்கி மனது சென்று கொண்டிருந்தது. அங்கே மகா பெரியவா இருந்தார். பல வண்ண விளக்கின் ஒளியில், ஹர ஹர சங்கர! ஜெய ஜெய சங்கர !! நாமம் ஓதி பெரியவா அருகில் சென்றோம். இவர் இங்கே வந்தது தனிக்கதை. அதை சுவாமிநாதன் ஐயா விடம் கேட்க மறந்து விட்டோம். மற்றுமொரு சந்திப்பில் இதை அறிவோம்.









அன்பர்கள் பொறுத்தருள்க. அடுத்த பதிவில் ஆயில்ய பூஜையின் அருள் தொடர்வோம்.


அன்புடன் அழைக்கிறோம்...
ஸ்ரீ லோபாமுத்திரை அகஸ்த்தியப்பெருமான் ஆயில்ய பூஜை பாண்டிச்சேரியில்
நாள் 28பெப்ருவரி 2018
புதன் கிழமை
மாலை 6 மணி முதல்
பிரார்த்தனை வாட்சப் செய்ய
9894269986
வருக அருள் பெறுக!!!



முந்தைய பதிவிற்கு :

பனப்பாக்கத்திலுள்ள ஸ்ரீ அகத்திய முனிவ தம்பதிகளுக்கு ஆயில்ய நட்சத்திர பூஜை - https://agathiyarvanamindia.blogspot.in/2018/02/blog-post_29.html

1 comment:

Trending