AGATHIYAR VANAM INDIA (AVI)

Monday, May 21, 2018

ஸ்ரீ அகத்திய மாமுனிவர் பூஜித்த மேலக்காட்டூர் அகத்தீஸ்வரர் ஆலயம்.


இன்று மே 22/05/2018
விளம்பி வருடம் வைகாசி 9ம் தேதி - இன்று செவ்வாய்கிழமை/அஷ்டமி

இந்த மே மாதம் முழுவதும் தங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் நண்பர்அனைவருக்கும் சிறப்பான
ஏற்றமான நலமான சுகமான தாக அமைய ஸ்ரீ லோபாமுத்திரை ஸ்ரீ அகத்தியர் ஆசிர்வாதம்.

இன்று அகத்தியர் லோபாமுத்திரை பூஜிக்கும் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வர் சமேத அபிராமிவள்ளியைதரிசித்து வளம் பெறுவோம். மனதில் தியானித்து நலம் பெறுவோம்.
அம்மை அப்பனை வணங்கி திருவருள் பெறும் நாள்.இன்றுஅனைவரின் இல்லத்தில் நிம்மதியும் மேன்மையும் மேலும் வளர ஸ்ரீ லோபாமுத்திரை அகத்தியர் ஆசீரவாதம்.

இன்றைய தினத்தை  ஸ்ரீ லோபாமுத்திரை ஸ்ரீ அகத்திய மாமுனிவர் பூஜித்த
தஞ்சை மாவட்டத்தில் உள்ள மேலக் காட்டூரில் இருக்கிறது அகத்தீஸ்வரர் ஆலயம் கண்டு தரிசிப்போம்.

இந்தக் கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ஆலயத்தின் உள்ளே நுழைந்ததும் அகன்ற பிரகாரம். நந்தி, பலிபீடங்களைக் கடந்ததும் மகாமண்டபமும், அதைத் தொடர்ந்து அர்த்த மண்டபமும் உள்ளது. அர்த்த மண்டப வாசலில் இடதுபுறம் பிள்ளையாரின் திருமேனி இருக்கிறது.
கருவறையில் இறைவன் அகத்தீஸ்வர சுவாமி, லிங்கத் திருமேனியில் அருள்பாலிக்கிறார். மகாமண்டபத்தில் வலதுபுறம் அன்னை அகிலாண்டேஸ்வரியின் சன்னிதி உள்ளது. அன்னை நான்கு கரங்களுடன் நின்ற கோலத்தில் புன்னகை தவழ அருள்பாலிக்கும் அழகே அழகு. அன்னை தன் மேல் இரண்டு கரங்களில் தாமரை மலரையும் கீழ் இரண்டு கரங்களில் அபய வரத ஹஸ்த முத்திரைகளுடன் அருள்பாலிக்கிறாள்.

அகத்தியர் பூஜை செய்த தலம் இது. இறைவனின் தேவ கோட்டத்தில் தென்புறம் தட்சிணாமூர்த்தியின் திருமேனி உள்ளது. இவரது அமைப்பு வித்தியாசமாக உள்ளது. அமர்ந்த நிலையில் உள்ள தட்சிணாமூர்த்தியின் காலை, அவரது பின்புறம் இருந்து நந்தி தேவர் தனது நாவால் வருடிக் கொண்டிருக்கும் காட்சி புதுமையாக இருப்பதுடன் அர்த்தமுள்ளதாகவும் உள்ளது.
ஆம்! தனது நாவால் நந்தி தேவர் குருபகவானை வருடுவதால், குருபகவான் கண் துயிலாது பக்தர்களின் கோரிக்கைகளை எந்த நேரத்திலும் கேட்டு அருள்பாலிக்கிறார் என்பதாக காரண காரியம் சொல்லப்படுகிறது.

தேவக் கோட்டத்தில் வடக்கில் துர்க்கை அருள்பாலிக்க, வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்கள் வீற்றிருக்கின்றனர். பிரகாரத்தின் மேல் திசையில் விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை, மகாலட்சுமி, சரஸ்வதி ஆகியோர் தனித் தனி சன்னிதிகளில் அருள்பாலிக்கின்றனர். வடக்குப் பிரகாரத்தில் சண்டிகேசுவரரின் சன்னிதி உள்ளது.

மகாமண்டபத்தில் கிழக்கு திசையில் சொர்ண பைரவர், கால பைரவர், சூரியன் ஆகியோர் அருள்புரிகின்றனர். ஆலயத்தின் தலவிருட்சம் பனைமரம்.
தீபாவளிக்கு மறுநாள் தொடங்கி 10 நாட்கள், இங்கு திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.
தினசரி இரண்டு கால பூஜை நடக்கும் இந்த ஆலயம், காலை 9 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.
கார்த்திகை சோமவாரங்களில் இங்கு 1008 தீபங்கள் ஏற்றப்பட்டு ஆலயம் ஜோதிமயமாக காட்சியளிக்கும். கார்த்திகையில் சொக்கபனை வைபமும், திருவாதிரையில் நடராஜர் சிவகாமி வீதியுலாவும் உண்டு. ஐப்பசி பவுர்ணமியில் அன்னாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. நவராத்திரி, சிவராத்திரி நாட்களும் இங்கு திருவிழா நாட்களே.
தேய்பிறை அஷ்டமியில் இங்குள்ள பைரவருக்கு தேங்காய் மூடியில் நல்லெண்ணெய் நிரப்பி, மிளகுப் பொட்டலம் கட்டி, தீபம் ஏற்றி வழிபட்டால் கடன் தொல்லையில் இருந்து மீள்வது உறுதி என்கின்றனர் பக்தர்கள்.

இங்கு அருள்பாலிக்கும் இறைவியை ‘ஓசை அம்மன்’ என்றும் பக்தர்கள் கூறுகின்றனர். ஆம்! அம்மனின் திருமேனியில் அர்ச்சகரின் மோதிரமோ அல்லது அர்ச்சனை தட்டோ அல்லது வேறு ஏதாவது உலோகமோ பட்டால், சப்த ஸ்வரங்களுடன் ஓசை வெளியிட்டு, கேட்பவரை மெய் சிலிர்க்க வைப்பது நிஜம் என்கின்றனர் பக்தர்கள்.

இந்த ஆலயத்தில் இறைவன் சன்னிதியில் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு, குழந்தையை தத்துக் கொடுக்கும் வைபவமும் சிறப்பாக நடைபெறு கிறது.அந்தக் குழந்தை மட்டுமல்ல, குழந்தையை தருபவர்களும், பெறுபவர்களும் இறைவன் அருளால் நிறைவாக வாழ்வது கண்கூடான உண்மை என்கின்றனர் பக்தர்கள்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம்-பந்தநல்லூர் பேருந்து தடத்தில் திருப்பனந்தாளில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது மேலக்காட்டூர் என்ற இந்த தலம்

சித்தர்கள் பூஜித்த இந்த திருக்கோயிலில் நாமும் போற்றி பணிந்து வளமும் நலமும் அடைவோம்.

ஓம் அகத்தீசாய நம! அகத்தியருக்கும் லோபாமுத்திரையும்18 சித்தர்களும் நித்தம் வணங்கும்
இத்தல பெருமானை வணங்குவோம்.
அகத்தியரை பணி அனுதினமும் சிறக்கும் நம் பணி.
ஸ்ரீ லோபாமுத்திரை ஸ்ரீ அகத்தியர் ஆசி ஆனந்தமான தினம்.
அகத்தியர் அடி பணி.அனைத்திலும் ஜெயம்அகத்தியரை துதி
அவர் மாற்றுவார் உன் விதி

- மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம் 

No comments:

Post a Comment